ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது, பணம் கொடுத்து வாக்கு கேட்பவர் கிரிமினலாகத்தான் இருக்க முடியும்


ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது, பணம் கொடுத்து வாக்கு கேட்பவர் கிரிமினலாகத்தான் இருக்க முடியும்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:22 PM GMT (Updated: 7 Feb 2019 10:22 PM GMT)

ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. பணம் கொடுத்து வாக்கு கேட்பவர் கிரிமினலாகத் தான் இருக்க முடியும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்பினை முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நவீன் சாவ்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் இருந்தே வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து சில சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் பாதுகாப்பானது என்று நான் பல முறை சொல்லி இருக்கிறேன். இப்போதும் சில அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து தவறான கருத்துகளை கூறி வருகின்றன. நான் இப்போதும் உறுதியாக கூறுகிறேன். வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் தான் வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்து தருகின்றனர். வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்வது, உங்களது வாக்குகளை விற்பனை செய்யாதீர்கள். வாக்குகள் விற்பதற்கு அல்ல. பணம் கொடுத்து ஓட்டு கேட்பவர் கிரிமினலாக தான் இருக்க முடியும். எனவே கிரிமினல் குற்றவாளிகளுக்கு உங்களது ஓட்டுகளை போட்டு விடாதீர்கள். வேட்பாளர்களின் படிப்பு, அவரது பின்னணி குறித்து முழுமையாக ஆராய்ந்து உங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story