மாலூர் அருகே தோட்டத்தில் பயிரிடப்பட்ட ரூ.20 லட்சம் கஞ்சா செடிகள் பறிமுதல்
மாலூர் அருகே, தோட்டத்தில் பயிரிடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா ஜாங்கலாஹள்ளி அருகே ஒப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடரமணப்பா. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகளை ஊடுபயிராக வெங்கடரமணப்பா வளர்த்து வருவதாக மாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீசுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி கடோச், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் ஒப்பட்டி கிராமத்திற்கு சென்றனர்.
இதனை ெதாடர்ந்து வெங்கடரமணப்பாவின் தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அந்த தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களான மஞ்சுநாத், ஸ்ரீகாந்த், நரசிம்மமூர்த்தி, சதீஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். முன்னதாக போலீசார் வருவதை அறிந்ததும் வெங்கடரமணப்பா தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள வெங்கடரமணப்பாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story