காதலை ஏற்காததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது


காதலை ஏற்காததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2019 11:00 PM GMT (Updated: 8 Feb 2019 5:22 PM GMT)

காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு அவதூறு கருத்துக்களை பரப்பினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி, 

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அனகோடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 28). இவரும், சூளகிரி அருகே உள்ள திராடி பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரும் சென்னையில் உள்ள வர்த்தக சேவை மையத்தில் (கால் சென்டர்) கடந்த 2015-ம் ஆண்டில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கவுரிசங்கர், அந்த இளம்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். அப்போது இளம்பெண் அவரது காதலை ஏற்க மறுத்தார். கடந்த 3-ந் தேதி கவுரிசங்கர், திராடி பகுதியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். அப்போது அப்பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர், இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டு, அவதூறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்திருந்த கவுரிசங்கரை கைது செய்தார்.

அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story