விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தாரின் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தாரின் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 9 Feb 2019 3:45 AM IST (Updated: 9 Feb 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், தாசில்தாரின் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவபாலன்(வயது 36). விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வயல் உள்ளது. இதற்கு செல்லும் பொது வழிப்பாதையை அதேபகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இது தொடர்பாக அப்போதைய கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடம் சிவபாலன் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற, அவர் கள்ளக்குறிச்சியில் தாசில்தாராக இருந்த அன்பரசனிட்ம கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றால் தனக்கு ரூ.1¾ லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். சிவபாலன் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறியதால், ரூ.1 லட்சமாவது தருமாறு தாசில்தார் கேட்டுள்ளார்.

இதுபற்றி சிவபாலன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீசாரின் ஆலோசனையின் பேரில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அரசு குடியிருப்பில் இருந்த தாசில்தார் அன்பரசனின் வீட்டுக்கு சென்ற சிவபாலன் முதற்கட்டமாக ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கிருந்த தாசில்தாரின் டிரைவர் கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த வில்லியஸ்(38) என்பவர் லஞ்ச பணத்தை வாங்கி தாசில்தாரிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி பிரியா நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம் சுமத்தப்பட்ட டிரைவர் வில்லியசுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த போதே, தாசில்தார் அன்பரசன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Next Story