ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழக அரசின் அறிவிப்புக்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்,
கிழக்கு கடைக்கோடி பகுதியான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் அரசு கல்லூரி எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ–மாணவிகள் தினமும் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரத்துக்கு சென்று அங்குள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இதையடுத்து மாணவ–மாணவிகளின் நலன் கருதி ராமேசுவரத்தில் அரசு சார்பில் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நேற்று நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தில் ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர், பேரன் சேக் சலீம் ஆகியோர் கூறும்போது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது தமிழக அரசு அப்துல்கலாம் மீது வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு வர்த்தக சங்கம், லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கம், நுகர்வோர் சங்கம், யாத்திரை பணியாளர் சங்கம் உள்பட பல்வேறு சமுதாய சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழக முதல்–அமைச்சர், மற்றும் துணை முதல்–அமைச்சர் ஆகியோருக்கு தீவு பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.