ராகுல் காந்தி அழைப்பு: நாராயணசாமி, நமச்சிவாயம் டெல்லி பயணம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை


ராகுல் காந்தி அழைப்பு: நாராயணசாமி, நமச்சிவாயம் டெல்லி பயணம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 9 Feb 2019 5:15 AM IST (Updated: 9 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியின் அழைப்பின்பேரில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு மாநில தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியின் முக்கிய தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், அனைத்து மாநில தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். புதுவை மாநிலத்தில் இருந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி, கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர் புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை சென்று பின்னர் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு இன்று(சனிக்கிழமை) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே புதுவை மாநில பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி நேரம் ஒதுக்கி தரும்படி பிரதமர் அலுவலகத்தில் கேட்டிருந்தார். பிரதமர் அலுவலகமும் அவருக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தது. ஆனால் பிரதமர் மோடியை சந்தித்து பேச முடியவில்லை. அதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி இலாகா பொறுப்பு வகிக்கும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அப்போது அவர்களிடம், புதுவை மாநிலத்தை நிதி கமி‌ஷனில் சேர்க்க வேண்டும், மத்திய அரசின் ஆரம்பகால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்காக வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. மேலும் பல மத்திய மந்திரிகளையும் சந்தித்து பேசவும் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள கட்சியின் புதுவை மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் நேற்றுமாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.


Next Story