நாகையில் 3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண உதவித்தொகை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


நாகையில் 3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-திருமண உதவித்தொகை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்- திருமண உதவித்தொகையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் சமூக நலத்துறை சார்பில் 11 ஒன்றியங்களை சேர்ந்த 3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, பஸ் பயண அட்டை உள்பட அனைத்தும் வழங்கப்படுகின்றன.

12-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் ரூ.25ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகர திட்டமாகும். நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை சேர்ந்த 3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என மொத்தம் ரூ.19 கோடியே 47 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) வேலுமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story