மத்திய, மாநில பட்ஜெட்டில் ஏமாற்றம்: சென்னை, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு அய்யாக்கண்ணு பேட்டி


மத்திய, மாநில பட்ஜெட்டில் ஏமாற்றம்: சென்னை, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில பட்ஜெட்டுகள் ஏமாற்றமளித்ததால் சென்னை, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி,

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டங்களும் இல்லை. இதேபோல மாநில பட்ஜெட்டிலும் விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை 29 மாநில விவசாயிகளையும் அழைத்து பேச உள்ளோம். விவசாயிகளுக்கு லாபகரமான விலையும், கடன் தள்ளுபடியும் தருகின்ற கட்சிக்கு வாக்களிப்பது என்பதும், இது பற்றி பேச மறுக்கும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தி 29 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசத்திற்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினரும் கடனிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் தருவதாக அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் தண்ணீர் கர்நாடகாவிற்கும், கேரளாவுக்கும் சென்றடைகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்யும் மழை தண்ணீர் எர்ணாகுளம் வழியாக கேரளா கடலில் கலக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்தால் அந்த தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் திருப்பிவிட வேண்டும். இல்லையென்றால் சென்னை தலைமை செயலகத்தின் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும்.

விவசாயிகளை இந்த அரசு அடிமையாக எண்ணுகிறது. தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலைகொடுக்க கோரியும் சென்னை, டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.

சென்னையில் வருகிற 21-ந்தேதி சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தவும், வருகிற 25-ந்தேதிக்கு மேல் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் (மார்ச்) 28, 29-ந்தேதிகளிலும் போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு அரசியல் கிடையாது. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியும் கிடையாது, ராகுல் காந்தி சொந்தமும் இல்லை. எங்களை காப்பாற்றினால் இந்த நாடு காப்பாற்றப்படும். மத்திய அரசு எங்களது கோரிக்கையை கேட்பதில்லை. விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுப்பதாக கூறி எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அய்யாக்கண்ணு பேசினார். மேலும் அவர் பேட்டியின் போது கூறியது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story