தரைமட்ட பாலத்தை விரைந்து கட்ட கோரி ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல்


தரைமட்ட பாலத்தை விரைந்து கட்ட கோரி ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தரைமட்ட பாலத்தை விரைந்து கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் இருந்து சூளைக்கு செல்லும் ரோட்டில் பாண்டியன்நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த தரைமட்ட பாலத்தை விரைந்து கட்டி முடிக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை பாண்டியன்நகர் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாலம் வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் செல்வதற்காக தரைமட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடிவதில்லை. பள்ளிக்கூட பஸ்களும், வேன்களும் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. இதன் காரணமாக ராம்நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு சரியான நேரத்திற்கு அனுப்பி வைக்க முடிவதில்லை. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அதற்கு போலீசார், ‘‘நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறி வேலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அங்கு சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story