மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று கலசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா மார்ச் 3 –ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12–ந் தேதி வரை நடக்கிறது.
இதற்கிடையே கடந்த பல மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிகள் தொடங்கியது. ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கோவில் சால கோபுரம், கொடிமரம், கருவறை மேற்கூரை, தேக்குமர சீலிங், நாகர் சன்னதி, பாட்டுச்சாவடி, முன்வாசல், மரக்கதவு மற்றும் சுற்றுச்சுவர் திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து கடந்த 2 நாட்களாக கலசாபிஷேக யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலையில் கலசாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சைதன்யானந்தஜீ மகராஜ், செங்கல்பட்டு திருவடி சூலம் பைரவர் ருத்ராலய பீடாதிபதி பைரவ சித்தாந்த சுவாமிகள், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான் தங்கம், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாவட்ட கோவில் நிர்வாக இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து என்ஜினீயர் அய்யப்பன், ஹைந்தவ சேவா சங்கம், ஸ்ரீதேவி கலா மன்றம், தேவி சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் புஷ்பாஞ்சலி, தீபாராதனை, இரவு ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தது.
விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story