உதயமார்த்தாண்டபுரத்தில் சாலை பணிகளை மீண்டும் தொடங்கக்கோரி கிராம மக்கள் மறியல்
உதயமார்த்தாண்டபுரத்தில் சாலை பணிகளை மீண்டும் தொடங்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் கடந்த ஆண்டு (2018) அகற்றப்பட்டன. உதயமார்த்தாண்டபுரம் ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ரெயில்வே கேட்டில் இருந்து நாச்சிக்குளம் பள்ளிவாசல் செல்லும் பகுதிக்கு சாலை அமைக்கும் பணிகளை கடந்த மாதம் (ஜனவரி) ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்த பணிகளுக்கு அங்கு முன்னதாக இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டியிருந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.
சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால் நாச்சிக்குளம் பகுதிக்கு செல்லும் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்தனர்.
பின்னர் சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியது. இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story