திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்


திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:30 AM IST (Updated: 11 Feb 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் கட்ட திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி, 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், இலங்கை, சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. திருச்சி விமானநிலையத்தில் தற்போது ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். வருகிற 2025-ம் ஆண்டில் 36 லட்சம் பயணிகளை கையாளக்கூடிய நிலை ஏற்படும். எனவே எதிர்கால தேவை கருதியும், பயணிகளின் வசதிக்காகவும் திருச்சி விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட முடிவு செய்யப்பட்டன. இதற்காக தற்போது உள்ள முனையத்தின் அருகே விமானநிலையத்தின் கிழக்கு பகுதியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய முனையம் ரூ.951 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கியது.

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதை காண்பதற்காக திருச்சி விமானநிலையத்தில் பழைய முனையம் அருகே காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மேலும் இதற்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, திருச்சி விமானநிலைய ஆலோசனை குழு தலைவர் குமார் எம்.பி., திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன், ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் அலீம், சுங்கத்துறை ஆணையர் ரவுத்ரே, புதிய முனைய திட்ட அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா உள்பட அதிகாரிகளும், அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மோடி அடிக்கல் நாட்டிய காட்சி ஒளிபரப்பப்பட்ட போது பா.ஜ.க.வினர் வாழ்த்து கோஷமிட்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நவக்கிரக ஹோமமும், கணபதி ஹோமமும் நடந்தது. 

Next Story