கோடை காலம் தொடங்குவதற்குள் வெயில் வாட்டுவதால் பெரம்பலூரில் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை படுஜோர்


கோடை காலம் தொடங்குவதற்குள் வெயில் வாட்டுவதால் பெரம்பலூரில் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 8:10 PM GMT)

கோடை காலம் தொடங்குவதற்குள் பெரம்பலூரில் வெயில் வாட்டி வருவதால் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுவதால் பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

பெரம்பலூர், 

கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை செல்லும் சாலையோரத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக தற்காலிக கடைகளை வியாபாரிகள் தொடங்கி உள்ளனர். அதில் தர்ப்பூசணி பழங்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். தாகத்தை தீர்ப்பது முதல் தர்ப்பூசணி பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி இருப்பதால் பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை பெரம்பலூரில் படுஜோராக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தர்ப்பூசணி விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், பல்வேறு மருத்துவ குணங்களை அடங்கிய தர்ப்பூசணி பழம் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே பயிரிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் தர்ப்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது தர்ப்பூசணி கிலோ கணக்கிலும், பழத்தை துண்டு, துண்டாக வெட்டியும் விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் ரூ.15-க்கு விற்பனை செய்கிறோம்.

வெயிலின் கொடுமையால் தாகத்தை தீர்த்துக்கொள்ள சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் ஆர்வத்துடன் தர்ப்பூசணி பழத்தை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். சிலர் வீட்டுக்கு கிலோ கணக்கில் பழங்களை வாங்கி செல்கின்றனர். இந்த தர்ப்பூசணி பழத்தின் சீசன் இன்னும் 5 மாதத்திற்கு இருக்கும். கோடை காலம் ஆரம்பித்து விட்டால் தர்ப்பூசணி பழங்களின் விலையும் உயரும் என்றார். 

Next Story