புலன் விசாரணை நுணுக்கம் குறித்து போலீசாருக்கு பயிற்சி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடந்தது
புலன் விசாரணை நுணுக்கம் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சின்னப்பன் தலைமையில் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட போலீஸ் துறையை செம்மைப்படுத்தும் விதமாக நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் புலன்விசாரணை நுணுக்கங்கள் குறித்து போலீசாருக்கு பயிற்சி வகுப்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கினார். மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியின் உதவியாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சி.சின்னப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், குழந்தைகள் தொடர்புடைய பாலியல் பிரச்சினை வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தொடர்புடைய ஆவணங்களை எத்தகைய வழிமுறையில் தாக்கல் செய்வது? குற்ற சம்பவங்களில் கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன? என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற வகையில் வழக்கில் நுணுக்கமாக விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்வது என்பன உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை போலீசார் கையாள்வது குறித்து பல்வேறு வழக்குகளின் தீர்ப்பினை சுட்டி காட்டி ஓய்வு பெற்ற நீதிபதி எடுத்துரைத்தார்.
மேலும் வழக்கின் புலன் விசாரணையை எப்படி நுணுக்கமாக மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மற்றும் அவர்கள் மீதான குற்றசாட்டின் ஆதாரங்களை திரட்டுவது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், புகார்தாரருக்கும் எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் ஆதரவு கரம் நீட்டுவது உள்ளிட்டவை பற்றியும் அவர் விளக்கி கூறினார். அப்போது இத்தகைய அணுகுமுறைகள் தொடர்பான அறிவுறுத்தலை பயிற்சிக்கு வந்த போலீசார் குறிப்பெடுத்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில், சட்டம்-ஒழுங்கு பிரிவு மற்றும் குற்ற பிரிவில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் 70 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story