எக்ஸ்பிரஸ் ரெயிலில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி, 600 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது


எக்ஸ்பிரஸ் ரெயிலில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி, 600 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 3:53 AM IST (Updated: 11 Feb 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சரக்கு பெட்டியை குத்தகைக்கு எடுத்து 600 கிலோ செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற ஒருவர் கைது கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள ரெயில் சேவை பொதுமக்களுக்கு மிக உதவியாக உள்ளது. பார்சல்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்லவும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தனி சரக்கு ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயிலில் சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் ரெயில்களில் உள்ள சரக்கு பெட்டிகளில் பார்சல்களை ஏற்றுவதற்கு முன் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்வது வழக்கம். இதேபோல, தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றப்படும் பொருட்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்ய அதிகாரம் இல்லை. இதனால் இந்த பெட்டிகளில் என்ன இருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

இந்தநிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பார்சல் அலுவலகம் அருகே கிடந்த 12 பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பார்சல்கள் யாருடையது என்று அறிந்துகொள்ள இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒருவர் அந்த பார்சல்களை எடுத்தார்.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபக் சிங் (வயது 35) என்பதும், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீபக் சிங்கை கைது செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-

பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் 600 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும். இந்த செம்மரக் கட்டைகளை அந்தமான் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னையில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கட்ராவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ரெயில்வே வணிக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரக்கு ரெயில் பெட்டி குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளோம். சென்டிரல் ரெயில் நிலையத்தின் பார்சல் பிரிவில் தனிப்படை அமைத்து கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பெட்டிகளை சோதனை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லாததால், குத்தகைதாரர்கள் எது வேண்டுமானாலும் எளிதாக கொண்டு வர முடியும். இதனால் போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட சட்ட விரோதமான பொருட்களை எளிதாக கொண்டு வரலாம்.

துறைமுகங்களில் சரக்கு பெட்டிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பின்னர் அந்த பெட்டிகள் சீல் வைக்கப்படுவது போல், ரெயில்வே நிர்வாகமும் குத்தகை சரக்கு ரெயில் பெட்டிகளில் உள்ள பொருட்களை கண்காணித்து, இதுபோன்று நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இது தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Next Story