பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: கைதானவர்களை விடுவிக்க கோரி ஊர்வலம் செல்ல முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் திட்டமிட்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் கைது செய்வதை கண்டித்தும், கைதானவர்களை விடுவிக்க கோரியும், உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அனுமதி கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யும் வகையில் ரெயிலடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தஞ்சை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து அனைத்து ஜனநாயக அமைப்பு மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர்.
ஆனால் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் பள்ளிவாசல் உள்ளே சென்றனர். பின்னர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதனை சந்தித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற போவதாக கூறிவிட்டு சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. வேறு வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தார். இதனால் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்தித்து அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என முடிவு செய்து அனைவரும் பள்ளிவாசலுக்கு சென்றனர். அங்கே ஆலோசனை நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story