ஓடும் பஸ்சில் துணிகரம் போலீஸ்காரர் மனைவி உள்பட 2 பெண்களிடம் ரூ.3 லட்சம் திருட்டு
ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவி உள்பட 2 பெண்களிடம் ரூ. 3 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
அழகியமண்டபம்,
நாகர்கோவில், வடசேரி குன்னுவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நெல்லையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுஜி ஷாலினி(வயது 33).
இவர் வில்லுக்குறியில் உள்ள தனது உறவினரிடம் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்தை கொடுத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று அந்த பணத்தை வாங்கிக்கொண்டு திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் பயணம் செய்தார். பஸ் சுங்கான்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, சுஜி ஷாலினி தான் வைத்திருந்த பையை பார்த்தபோது, அதில் இருந்த பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சுஜி ஷாலினி இரணியல் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல், மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ஷீலா(வயது 43). இவர் சுயஉதவிக்குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் காலையில் ஷீலா திங்கள் நகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது, அவரது கைப்பையில் வைத்திருந்த ரூ.76 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story