சுவரொட்டியில் தளவாய்சுந்தரம் பெயர் இல்லாததால் அரசு பள்ளிக்கூட விழா ரத்து பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
சுவரொட்டியில் தளவாய்சுந்தரம் பெயர் இல்லாததால் அரசு பள்ளிக்கூட விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல்,
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கீழ்குளம் ஆனைவிளையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் 109 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதற்காக கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் கேட்டு அரசுக்கு மனு கொடுத்தனர். அப்போது இடம் இல்லை என்று கூறி அரசு தரப்பில் தாமதம் ஏற்பட்டது.
உடனே பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இணைந்து பணம் வசூல் செய்து 14 சென்ட் இடத்தை பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக வாங்கினர். அதன்பிறகு இடத்தை நாங்கள் தருகிறோம். நீங்கள் நிதி மட்டும் ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கூறி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசுக்கு மனு கொடுத்தனர்.
கடந்த 5 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு ஆனைவிளை அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்துவதற்கு மாவட்ட கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழகம், ஊர் பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
இதற்காக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பள்ளிக்கூட புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவதாக இருந்தது.
இதற்கிடையே கருங்கல் பகுதியில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அதில், ஆனைவிளை அரசு பள்ளிக்கூட அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் குமரி மாவட்ட பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் சிந்துகுமார், ஆனைவிளை அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கில்ட்டஸ் மற்றும் சங்க நிர்வாகிகளை வரவேற்று வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. ஆனால் தளவாய்சுந்தரம் வருகை பற்றி எந்த இடத்திலும் விளம்பரம் செய்யப்படவில்லை.
பள்ளிக்கூட புதிய கட்டிடத்துக்கு தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டுவதாக ஏற்பாடு நடந்து வந்த நிலையில், அவரது பெயர் இல்லாமல் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டியால் அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க.வினருக்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
இதற்கிடையே நேற்று காலை 8 மணி அளவில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்காக குமரி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிந்துகுமார், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கில்ட்டஸ் மற்றும் சங்க நிர்வாகிகள், ஊர் மக்கள் ஆனைவிளை அரசு பள்ளிக்கு வருகை தந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் தடபுடலாக செய்து இருந்தனர்.
9 மணி அளவில் பள்ளிக்கூடத்துக்கு வருகை தந்த குழித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் நாயர், அடிக்கல் நாட்டு விழா திடீரென ரத்து செய்யப்படுவதாகவும், இன்னொரு நாள் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றும் அறிவித்தார். அதாவது தளவாய்சுந்தரம் வரவில்லை எனவும், அதனால்தான் விழா ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது விழாவுக்கு வருகை தந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனைவிளை மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், யார் வந்தாலும், வராவிட்டாலும் சரி எங்களது பள்ளிக்கூட புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக போராடி இப்போதுதான் நிதி பெற்று இருக்கிறோம். எங்களுக்கு தளவாய்சுந்தரம் உள்ளிட்ட எந்த அரசியல்வாதிகளும் உதவி செய்யவில்லை. எனவே எங்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை வைத்து இன்று (அதாவது நேற்று) புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட வேண்டும். அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி பள்ளிக்கூட வளாகத்தில் போராட்டம் நடத்தினர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்கள் போராட்டம் பற்றி மாவட்ட கல்வி அதிகாரி ராமச்சந்திரன் நாயர், முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்நாதன் மற்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோரிடம் செல்போனில் பேசினார். அப்போது அடிக்கல் நாட்டு விழா இன்று நடத்த முடியாது என்றும், நாளை நடத்தப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரி, கிராம மக்களிடம் பேசினார். அதற்கு கிராம மக்கள், நாளை (புதன்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் தளவாய்சுந்தரம் உள்ளிட்ட எந்த அரசியல்வாதிகளும் விழாவில் கலந்து கொள்ள கூடாது. எங்களது பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மட்டும் வைத்து நாங்கள் விழா நடத்தி கொள்வோம். அதில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதையும் மாவட்ட கல்வி அதிகாரி உயர் அதிகாரிகளிடம் பேசினார். அதன்பிறகு, கிராம மக்களின் வேண்டுகோளின்படி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளே புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து கலைந்து சென்றனர். நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கிய பரபரப்பு மதியம் 3 மணி வரை நீடித்தது.
Related Tags :
Next Story