மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 9:42 PM GMT)

மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகம் முன்பு நேற்று துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார்.மாநகராட்சியின் பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மகளிர் சுய உதவி குழு துப்புரவு தொழிலாளர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் அதனை உடனே வழங்க வேண்டும், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்புரவாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை முழுமையாக வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பிச்சான், பொருளாளர் நாகராஜன், பொறுப்பாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினார்கள். துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது பற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் வெளியே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஜனவரி மாத சம்பளத்தை உடனடியாக காசோலை மூலம் வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story