விழுப்புரத்தில், காவலாளியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது
விழுப்புரத்தில் காவலாளியை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். அதற்கான காரணம் குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 48). இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு ஆயில் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செண்பகவள்ளி(40) மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கண்டம்பாக்கத்தில் உள்ள செண்பகவள்ளியின் தாய் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த கதிர்வேல் தனது மனைவியுடன் விழுப்புரம் சாலாமேடு கிழக்கு வி.ஜி.பி.நகரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு இவர்களுடைய குடிசை வீடு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த அக்கம், பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது வீட்டிற்குள் கதிர்வேல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், கதிர்வேலின் உடலை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் செண்பகவள்ளி இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த செண்பகவள்ளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள வயல்வெளிக்கு சென்ற சமயத்தில் யாரோ மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து தனது கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டிற்கும் தீ வைத்து சென்று விட்டதாக கூறினார்.
இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், மேலும் இடப்பிரச்சினை காரணமாக செண்பகவள்ளிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வருவதும் தெரிந்தது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும், செண்பகவள்ளிக்கும் இடத்தகராறு இருந்து வருவதும், ஆனால் சம்பவத்தன்று அவர்கள் 5 பேரும் ஊரில் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து செண்பகவள்ளி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. எனவே போலீசார் அவரிடம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது கணவரை, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டிற்கு தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதற்கான காரணம் குறித்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், கதிர்வேலுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நான் சிறுவயதில் இருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் மார்க் சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தேன்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது கணவர், அவர் வேலை பார்த்த ஆயில் கம்பெனியில் இருந்து ரூ.3 லட்சத்தை பெற்றுக்கொண்டு வந்ததை தொடர்ந்து சாலாமேடு பகுதியில் குடிசை அமைத்து நாங்கள் இருவரும் அங்கு வசித்து வந்தோம். எனது கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி வந்தார். அவரது தொந்தரவினால் மனநிம்மதியின்றி இருந்தேன். கணவர் உயிரோடு இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்று எண்ணிய நான், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி கடந்த 6-ந் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கதிர்வேல், என்னை திட்டி தாக்கினார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தேன்.
இதில் எனது உடையில் ரத்தக்கறை படிந்ததால், வேறு உடையை மாற்றினேன். பின்னர் ரத்தக்கறை படிந்த உடையையும், கத்தியையும் எடுத்துச் சென்று புதிதாக கட்டப்பட்டு வரும் சட்டக்கல்லூரி கட்டிடத்தின் மதில்சுவர் ஓரமாக போட்டேன்.
அதன் பிறகு வீட்டிற்குள் படிந்திருந்த ரத்தக்கறையையும் கழுவி சுத்தம் செய்துவிட்டு ஒரு விளம்பர பதாகையை கீழே விரித்து அதில் எனது கணவரை கிடத்தினேன். பின்னர் வீட்டின் உட்புறமாக தீ வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டேன். சிறிதுநேரம் கழித்து அங்கு வந்த நான், எனது கணவரை யாரோ கொலை செய்து விட்டார்களே என்று அழுது நாடகமாடினேன்.
மேலும் இந்த கொலையை மறைப்பதற்காக இடப்பிரச்சினை காரணமாக தனது கணவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கொலை செய்துவிட்டு வீட்டிற்கும் தீ வைத்து சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை செய்து, நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story