ஏப்ரல் மாதத்தில் இருந்து காஜா–பட்டன் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு சங்க கூட்டத்தில் தீர்மானம்
வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து காஜா பட்டன் விலையை 25 சதவீதம் உயர்த்துவது என காஜா பட்டன் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இது தவிர பிரிண்டிங், தையல், கட்டிங், அயர்னிங் என்பது உள்பட பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
பின்னலாடை நிறுவனங்களில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு ஜாப் ஒர்க்குகள் செய்வதற்காக பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜாப் ஒர்க்கில் காஜா பட்டன் முக்கிய பங்காற்றி வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல கட்டணங்களை உயர்த்தி விட்டன.
இந்நிலையில் காஜா பட்டன் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் திருப்பூர் அரண்மனைப்புதூர் தாராபுரம் ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ருத்ரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் துணைத்தலைவர்கள் குமார், பாலு, செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் திருமுருகேஷ், செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருப்பூருக்கு வருகை தந்த மோடியை வரவேற்பது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வினால் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து காஜா பட்டன் விலையை நடப்பு விலையில் இருந்து 25 சதவீதம் உயர்த்துவது, இதற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.