சாக்லெட் திருடி சிக்கிய பெண் மிரட்டி கற்பழிப்பு போலீஸ்காரர் கைது


சாக்லெட் திருடி சிக்கிய பெண் மிரட்டி கற்பழிப்பு போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

சாக்லெட் திருடி சிக்கிய பெண்ணை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

மும்பை பவாய் பகுதியில் பிரபல டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. இங்கு கடந்த 6-ந்தேதி 32 வயது பெண் ஒருவர் சாக்லெட் திருடி சிக்கினார். கடை ஊழியர்கள் அந்த பெண்ணிடம் இருந்து 10 சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து எம்.ஐ.டி.சி. போலீஸ்காரர் மதுக்கர் அவ்காத்(வயது48) அங்கு சென்றார்.

அவர் சாக்லெட் திருடிய பெண்ணிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பிவிட்டார். அப்போது, போலீஸ்காரர் பெண்ணின் ஆதார் கார்டு, செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று போலீஸ்காரர் மதுக்கர் அவ்காத் திருட்டு புகார் குறித்து பேசவேண்டும் என கூறி, அந்த பெண்ணை ஆரே ரோடு பகுதிக்கு வரச்சொன்னார். பின்னர் அவர் திருட்டு புகார் மீது நட வடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டி பெண்ணை அருகில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். மேலும் அவர் பெண்ணின் செல்போனில் 2 பேரும் சேர்ந்து இருந்தபடி ‘செல்பி’ எடுத்து உள்ளார்.

இந்தநிலையில் செல்போனில் அந்த படத்தை பார்த்து பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விசாரித்த போது பெண் தனக்கு நடந்த அவலங்களை கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் சம்பவம் குறித்து பவாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சாக்லெட் திருடி சிக்கிய பெண்ணை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர் மதுக்கர் அவ்காத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story