கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவில்லை போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி


கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவில்லை போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 12 Feb 2019 5:00 AM IST (Updated: 12 Feb 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவில்லாததால் போலீஸ் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் கடந்த 2017–ம் ஆண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போலீசார் அபராதம் விதித்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

குறிப்பாக பெண்கள் இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களால் தலையில் பூ வைத்தபடி செல்லமுடியவில்லை என்றும், பூ வைக்காததால் அமங்கலமாக இருப்பதாகவும் கருத்துகளை தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக திட்டம் அமல்படுத்தப்பட்ட மறுநாளே ஒத்திவைக்கப்பட்டது.

ஹெல்மெட் அணிவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 9–ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கட்டாய ஹெல்மெட் சட்டம் 11–ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

முதல் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.100 அபராதமும், 2–வது முறை பிடிபட்டால் ரூ.300 அபராதம் என்றும் 3–வது முறை பிடிபட்டால் லைசென்சு ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். அதேபோல் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை காரணம் காட்டி கவர்னர் கிரண்பெடியும் உறுதியாக இருந்தார்.

ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அபராதம் விதிக்கும் வி‌ஷயத்தில் கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவின் நடவடிக்கைகளில் முரண்பாடாக இருந்தனர். புதுவை மக்கள் எதையும் அன்பாக சொன்னால்தான் கேட்பார்கள். அதிகரமாக செய்தால் ஏற்கமாட்டார்கள். முதலில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால் கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோரின் திட்டப்படி கட்டாய ஹெல்மெட் திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா? என்று முக்கிய சந்திப்புகளில் காலை முதலே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வின்போது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் 100–க்கு 98 பேர் ஹெல்மெட் அணியவில்லை. 2 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்திருந்தனர். அதிலும் பெரும்பாலானவர்கள் ஆண்களாகத்தான் இருந்தனர். பெண்கள் ஹெல்மெட் அணிந்து செல்வதை எங்காவது ஓரிடத்தில்தான் அரிதாக காணமுடிந்தது. ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை மற்றவர்கள் வினோதமாக பார்த்தார்கள்.

நேரம் செல்ல செல்ல ஹெல்மெட் அணிந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைத்தனர். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. வழக்கம்போல் மக்கள் ஹெல்மெட் அணியாமலேயே வந்தனர். பிற்பகலில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைந்து போனது. காலை நேரத்தில் சிலரை மடக்கி போலீசார் அபராதம் விதித்தனர். போலீசாரின் கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவில்லை என்பதை கண்கூடாக காணமுடிந்தது.

ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போலீசாரும் திணறினார்கள். பின்னர் அவர்கள் சிக்னல்களில் நின்றபடி சில வாகனங்களின் பதிவு எண்களை குறித்துக்கொண்டனர். கோரிமேடு போக்குவரத்து போலீசார் சுமார் 2 ஆயிரம் வாகனங்களின் எண்களை குறித்து வைத்துள்ளனர். அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் ஹெல்மெட் அணியாததால் அவர்களுக்கு கோர்ட்டி அபராதம் செலுத்த நோட்டீசு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கட்டாய ஹெல்மெட் திட்டத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்த நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று காவல்துறை வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளது.


Next Story