பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது நாராயணசாமி பேட்டி


பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2019 5:30 AM IST (Updated: 12 Feb 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.2.50 கோடி செலவில், 8 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. வாஞ்சியாறு புதிய பாலமும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் பெரும் சர்ச்சையாக இருப்பது ஹெல்மெட் கட்டாய சட்டம் தான். இந்த சட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கொண்டுவந்தோம். அதற்கு பொதுமக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லை. இது தொடர்பாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை படிப்படியாகத்தான் கொண்டு வரவேண்டும். ஆனால் புதுச்சேரி கவர்னர், அதிகாரிகளை மிரட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை போட்டுள்ளார். உத்தரவு போட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், நடு ரோட்டில் நின்று இருசக்கர வாகனங் களில் செல்பவர்களிடம் ஹெல்மெட் கட்டாயம் போடவேண்டும் என போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு எங்கள் தேர்தல் பணி தற்போது உள்ளதைவிட தீவிரமாகும். கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.13 கோடி கொடுத்துள்ளதாகவும், அதனை புதுச்சேரி அரசு செலவு செய்யவில்லை எனவும் பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறது. நாங்கள் கேட்டது ரூ.1600 கோடி, ஆனால் மத்திய அரசு கொடுத்தது வெறும் 13 கோடி. இது மூக்குப்பொடி வாங்கத்தான் சரியாக இருக்கும்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஊழலற்ற ஆட்சி என பிரதமர் நரேந்திரமோடி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story