தஞ்சையில், அகழியில் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது


தஞ்சையில், அகழியில் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், அகழியில் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ‘‘ஸ்மார்ட் சிட்டியாக’’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாநகரில் ‘‘ஸ்மார்ட் சிட்டி’’ திட்ட பணிகள் ரூ.1,289 கோடி மதிப்பில் நடைபெற உள்ளன. இதில் தஞ்சை மாநகரை அழகுபடுத்துவது, சாலைகளை சீரமைப்பது, குடிநீர் வசதிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 12 வகையான பணிகள் அடங்கும்.

‘‘ஸ்மார்ட் சிட்டி’’ திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தஞ்சை மாநகரில் உள்ள அகழி பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தஞ்சை பெரிய கோவில் பின்புறம் அமைந்துள்ள சேவப்பநாயக்கன்வாரி பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டன. இதன்பின்னர் தஞ்சை வடக்குவாசல் பகுதி, தஞ்சை கீழ்அலங்கத்தின் ஒரு பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு வல்லம் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து தஞ்சை கீழ் அலங்கம் பகுதியில் கொடிமரத்து மூலையில் இருந்து வெள்ளைவிநாயகர் கோவில் வரை அகழியை ஒட்டி உள்ள 125 வீடுகளை இடிக்கும் பணி கடந்த மாதம் 28–ந் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எங்களுக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் பொருட்களை அங்கே மாற்றவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றனர். அதற்காக வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் வீடுகளை எல்லாம் மக்கள் தாங்களாகவே காலி செய்தனர்.


கதவு, ஜன்னல்களையும் பெயர்த்து எடுத்து சென்றனர். இதையடுத்து வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் நேற்றுகாலை தொடங்கியது. மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் வீடுகள் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தாங்கள் ஆசையாக கட்டிய வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்து சாலையோரம் நின்று மக்கள் கண்ணீர் சிந்தினர். எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story