கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி இரூரில் பால் உற்பத்தியாளர்கள் தரையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடாலூர்,

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

போராட்டத்திற்கு இரூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். அவர்கள், பால் கொள்முதல் விலையை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தி வழங்காத தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திடீரென்று பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கலந்து கொண்டவர்கள், பசும்பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டருக்கு ரூ.35 வழங்க வேண்டும். விற்பனை விலையை உயர்த்தாமல் கர்நாடகாவை போல தமிழக அரசும் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மாட்டு தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

Next Story