கும்பகோணத்தில் ரதசப்தமி விழா: சுழலும் சூரிய பிரபை வாகனத்தில் சக்கரபாணி பெருமாள் வீதி உலா


கும்பகோணத்தில் ரதசப்தமி விழா: சுழலும் சூரிய பிரபை வாகனத்தில் சக்கரபாணி பெருமாள் வீதி உலா
x
தினத்தந்தி 13 Feb 2019 4:00 AM IST (Updated: 13 Feb 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் ரதசப்தமி விழாவையொட்டி சக்கரபாணி பெருமாள் சுழலும் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி 97 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.

கும்பகோணம்,

சூரியன் தெற்கு நோக்கிய தனது பயணத்தை முடித்துக்கொண்டு, வடக்கு நோக்கிய பயணத்தை தை மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் தொடங்கும் நாள் “ரதசப்தமி” என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவானுக்கு உகந்த நாளான இந்த நாளில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் ரதசப்தமி விழா நடைபெறுவது வழக்கம்.

சக்கரபாணி கோவில் சூரிய பகவானால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் என புராணங்கள் கூறுகின்றன. சூரியனால் உருவாக்கப்பட்டதால் இக்கோவிலை பாஸ்கர சேத்திரம் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் ரதசப்தமி விழா அன்று சக்கரபாணி வீதி உலா நடைபெறும்.

கடந்த 96 ஆண்டுகளுக்கு முன்பு சக்கரபாணி பெருமாள் சுழலக்கூடிய சூரிய பிரபை வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூழலும் சூரிய பிரபை வாகனம் சிதிலம் அடைந்ததால் கடந்த பல ஆண்டுகளாக வாகனத்தை வீதி உலாவுக்கு பயன்படுத்த முடியவில்லை.

இந்த ஆண்டு ரதசப்தமி விழாவில் சுழலும் சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கோவில் தேர் கட்டுமான ஸ்தபதி செல்வம் உள்ளிட்டோர், சுழலும் சூரிய பிரபை வாகனத்தை சீரமைத்தனர். இந்த நிலையில் நேற்று ரதசப்தமி விழா கோவிலில் நடந்தது.

விழாவில் சக்கரபாணி பெருமாள் சுழலும் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 97 ஆண்டுகளுக்கு பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி பெருமாள் வீதி உலா வந்ததை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Next Story