பா.ம.க. பிரமுகர் படுகொலைக்கு கண்டனம்: கடைகள் அடைப்பு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 105 பேர் கைது


பா.ம.க. பிரமுகர் படுகொலைக்கு கண்டனம்: கடைகள் அடைப்பு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 105 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 6:44 PM GMT)

திருபுவனம் பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை,

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் ஆவார். இவரை கடந்த 5-ந் தேதி ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடை அடைப்பு போராட்டம் நடத்த மத வன்முறைக்கு எதிரான இயக்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.

அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறை பட்டமங்கல தெரு, மகாதான தெரு, பெரியக்கடை தெரு, டவுன் எக்ஸ்டன்ஷன் சாலை, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன.

ஜவுளிக்கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், ஹோர்டுவேர்ஸ், டீக்கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைவீதிகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் அமைதி ஊர்வலம் செல்ல விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அமைதி ஊர்வலத்துக்கு தடை விதித்தனர்.

ஆனால் தடையை மீறி அமைதி ஊர்வலம் சென்று ராமலிங்கத்தின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் முடிவு செய்தனர்.

அதன்படி மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் ஒன்று திரண்டு மத மாற்றத்தை தடுப்போம், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம், ராமலிங்கம் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பா.ஜனதா கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு, அமிர்தவிஜயகுமார், நகர தலைவர் கண்ணன், விசுவஇந்து பரிஷத் மாநில துணை தலைவர் வாஞ்சிநாதன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் போலீசார் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் 105 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ராமலிங்கத்தின் உருவப்படத்துக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதால் மயிலாடுதுறை கச்சேரி சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story