விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Feb 2019 5:00 AM IST (Updated: 13 Feb 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 45). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது தம்பி ரமேஷ்குமார் அதே கட்சியில் அச்சு ஊடகப்பிரிவு மாநில துணைசெயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடன் சேர்ந்து அழகர்சாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மன்னார்புரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து அழகர்சாமி தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் மர்ம கும்பல் சென்றது. அழகர்சாமியின் காரை கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனி அருகே அந்த கும்பல் வழி மறித்தது. மேலும் கார்களில் இருந்து 7 பேர் கும்பல் அரிவாள், கத்தியுடன் இறங்கி, அழகர்சாமியை மிரட்டி தங்களது காரில் ஏற்றிச்சென்றனர். அவர் ஓட்டிவந்த காரை அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் ஓட்டினார்.

காரில் அழகர்சாமியை ஏற்றிக்கொண்ட அந்த கும்பல் மதுரை தேசியநெடுஞ்சாலையை நோக்கி கடத்தி சென்றது. மேலும் அவர் அணிந்திருந்த 18 பவுன் நகைகள் மற்றும் அவர் காரில் கொண்டு வந்த ரூ.4 லட்சத்தையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பறித்துக்கொண்டனர். காரை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அந்த கும்பல் நிறுத்தி மேலும் ரூ.1 கோடி தரவேண்டும் எனவும், தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த அழகர்சாமி ரூ.40 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அவரை அங்கேயே இறக்கிவிட்டு சென்றது. மேலும் அவரது காரை கடத்தி சென்றுவிட்டனர். இதற்கிடையில் அழகர்சாமியின் தம்பி ரமேஷ்குமார் தகவல் அறிந்து வேறு ஒரு காரில் விரைந்து சென்று அவரை மீட்டு கே.கே.நகர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று அதிகாலை கே.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

நடந்த சம்பவத்தை போலீசாரிடம் அழகர்சாமி விளக்கி கூறினார். மேலும் தன்னை கடத்தியதில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த அசோக், பட்டாசு ராஜா ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், மர்ம கும்பல் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். அசோக், ராஜா ஆகியோர் அழகர்சாமியுடன் பங்குதாரர்களாக இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக பிரிந்து விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அழகர்சாமியின் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி (வாகனத்தின் இருப்பிடத்தை அறிய உதவும் கருவி) மூலம் அவரது கார் மதுரை விளாங்குடியில் ஒரு தெருவில் நிற்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மதுரை புறப்பட்டு சென்றனர். அந்த காரை மீட்டு கொண்டு வர போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காரில் கடத்தி பணம் மற்றும் நகைகளை பறித்துவிட்டு மேலும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மன்னார்புரம், கே.கே.நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story