சமூக வலைதளங்களில் மதம் குறித்து அவதூறு, பாரதீய ஜனதா முன்னாள் நிர்வாகி கோவை கோர்ட்டில் ஆஜர்


சமூக வலைதளங்களில் மதம் குறித்து அவதூறு, பாரதீய ஜனதா முன்னாள் நிர்வாகி கோவை கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 13 Feb 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி கல்யாணராமன் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை,

பாரதீய ஜனதா கட்சியின் மாநில ஊடகத்துறை முன்னாள் பொறுப்பாளர் கல்யாணராமன். இவர் இஸ்லாம் மதம் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மக்கள் தொடர்பு அதிகாரி எம்.நவ்பல் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் குனியமுத்தூர் போலீசார் கல்யாணராமன் மீது மத உணர்வுகளை தூண்டுவது, வதந்தி பரப்புவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கல்யாணராமன் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். இதைத்தொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் கோவையில் பதிவு செய்த வழக்கிலும் முறைப்படி கைது நடவடிக்கைக்காக கடலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் கல்யாணராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அனுமதி கேட்டனர். அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து கல்யாணராமன் கடலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நேற்று கோவை 7-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பாண்டி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது குறித்து விசாரித்த நீதிபதி, வருகிற 26-ந் தேதி கல்யாணராமனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் கல்யாணராமன் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கல்யாணராமன் மீது புகார் செய்த பாப்புலர் பிரண்ட் அமைப்பு மக்கள் தொடர்பு அதிகாரி நவ்பல் கூறும்போது, ‘கல்யாணராமன் மீது மத உணர்வை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது யு.ஏ.பி.ஏ.(சட்டவிரோத தடுப்பு சட்டம்) என்ற சட்டத்தின்படியும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லா விட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.

Next Story