மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழியே இருக்காது பாலகிருஷ்ணன் பேட்டி


மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழியே இருக்காது பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 4:45 AM IST (Updated: 13 Feb 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்மொழியே இருக்காது என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கரூர்,

கடந்த 4½ ஆண்டுகளாகவே நீட் தேர்வு, ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரும் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை ஆகியவற்றில் தமிழக அரசை வஞ்சிக்கும் வகையில் தான் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. பலமுறை தமிழகத்திற்கு மோடி வருகை தந்திருக்கிறார். ஆனால், கஜா புயலில் சிக்கி தமிழகம் தவித்தபோது ஆறுதல் கூறக்கூட அவர் வராதது வேதனை அளிக்கிறது.

சமீபத்தில், அவரை வைத்து தமிழக திட்டங்களை தொடங்கியிருப்பது ஏற்புடையதல்ல. அந்த நிகழ்ச்சியின்போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் வந்தால் ஆட்சி பறிபோகுமோ? என்கிற அச்சம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. மத்திய, மாநில அரசுகள் நிர்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் ஒருபோதும் செவிசாய்க்க கூடாது.

மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கேட்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை. மோடி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழியே இருக்காது. தி.மு.க.வுக்கு தூது அனுப்பினாலும் பா.ஜ.க. பக்கம் சாய்கிற வகையில் முகாந்திரம் இல்லை.

ஐ.நா.சபையில் 14-வது பட்டியலில் உள்ள தமிழை 10-வது இடத்திற்கு கொண்டு வருவதாக மாநில அரசு கூறுகிறது. தமிழகத்தில் மழலையர் பள்ளியில் ஆங்கிலம், தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை சரிசெய்யாமல் அதுபோல் கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது.

வறுமை கோட்டுக்கு கீழ்உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் கொடுப்பதால் வறுமையை ஒழித்து விட முடியாது. பட்ஜெட்டில் 44 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கிறபோது, இதற்கென கோடிக்கணக்கில் செலவழிப்பது என்பது தேர்தலை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை நீடித்துக்கொண்டே செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முதலில் கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வத்திடமும், லண்டன் டாக்டர் பீலேவிடமும் இதுவரை விசாரணை நடத்தப்படாதது ஏன்? என்பது தெரியவில்லை.

அப்பல்லோ நிர்வாகமும், மருத்துவ கழகம் அமைத்து அதில் நாங்கள் பதில் அளிக்கிறோம் என கூறுவது அந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையை உரசி பார்ப்பது போல் உள்ளது. கோடநாடு கொலை தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில் முதல்-அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் உள்ள கூட்டுறவு, தனியாருக்கு சொந்தமான 10 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் கரும்பு சாகுபடி குறைந்து விட்டன.

கரூர், கோவை, திருப்பூரில் நூற்பாலை, ஆயத்த ஆடை, ஜவுளி தொழிலும் சரிவை தான் சந்தித்து வருகிறது. அப்படி இருக்கையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெறுவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். நொய்யல் ஆற்று கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story