விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா சித்தாத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 80), இவருடைய மனைவி வள்ளியம்மை (70). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் கண்டாச்சிபுரத்திற்கு செல்வதற்காக மாலையில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக இருவரும் காத்து நின்றனர்.
அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், வள்ளியம்மையிடம் சென்று நைசாக பேச்சுக்கொடுத்தபடி, விழுப்புரம் பஸ் நிலையத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது, எனவே நகையை அணிந்துகொண்டு பஸ்சில் செல்லாதீர்கள் என்றும் நகையை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுமாறும் கூறினார். இதை நம்பிய வள்ளியம்மை தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, கையில் போட்டிருந்த 3 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றி தான் கொண்டு வந்திருந்த பையில் வைத்தார். பின்னர் கண்டாச்சிபுரம் செல்லும் அரசு டவுன் பஸ் வந்ததும் வள்ளியம்மையும், அழகப்பனும் பஸ்சில் ஏறினர். அதன் பிறகு பஸ் புறப்படுவதற்கு முன்பாக வள்ளியம்மை தனது பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை. அப்போது தான் பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்த பெண், வள்ளியம்மையிடம் நகையை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.
நகையை பறிகொடுத்த வள்ளியம்மை, இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு நகையை அபேஸ் செய்து தப்பிச்சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story