மாவட்டம் முழுவதும் 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாமக்கல் மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சுமார் 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
நாமக்கல்,
வக்கீல்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். வக்கீல் ஒருவர் 65 வயதுக்குள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இளம் வக்கீல்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் மாத உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்கவுன்சில் பிப்ரவரி 12-ந் தேதி ஒருநாள் மட்டும் அனைத்து வக்கீல்களும் நீதிமன்ற பணிகளில் இருந்து தங்களை விடுவித்து கொண்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு வழங்க வேண்டுகோள் விடுத்து இருந்தது.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி மற்றும் ராசிபுரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 1000 வக்கீல்கள் பங்கேற்றதாக வக்கீல் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனால் நீதிமன்றங்களில் தினசரி நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்தும் வக்கீல் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் குற்றவியல் வக்கீல்கள் சங்கத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ரவிக்குமார், சார்பு நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் வி.சுந்தரம், துணைத்தலைவர் சக்திவேல், செயலாளர் ரமேஷ்குமார், சென்ட்ரல் பார் அசோசியேசன் தலைவர் ராஜ்குமார், சிவில் வக்கீல்கள் சங்கத் தலைவர்கள் கார்த்திகேயன், சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story