சம்பள குறைப்பை கண்டித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது
சம்பளம் குறைக்கப்பட்டதை கண்டித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது.
அரியாங்குப்பம்,
புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2015–ம் ஆண்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் குறைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்பளம் குறைக்கப்படாது என்றும் குறைக்கப்பட்ட தொகை மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்தபடி அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக்கண்டித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அவர்களது போராட்டம் 2–வது நாளாக நீடித்தது.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக நோணாங்குப்பம் படகு குழாம், சீகல்ஸ் உணவகம், லே கபே உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்த போராட்டம் இன்றும் (புதன்கிழமை) நீடிக்கும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று படகு சவாரி நடைபெறவில்லை. இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.