ஜோலார்பேட்டை அருகே தி.மு.க.முன்னாள் எம்.பி.யை தாக்க முயன்றவருக்கு அடி-உதை
ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி சபை கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யை, குடிபோதையில் தாக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க.வினர் பிடித்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றிய தி.மு.க. சார்பில் அம்மையப்ப நகர் வரதராஜகவுண்டர் வட்டம், பாச்சல், சின்னமூக்கனூர், தாமலேரிமுத்தூர், கட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. சுகவனம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அம்மையப்பநகர் வரதராஜகவுண்டர் வட்டத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சிந்துஜா ஜெகன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, முன்னாள் எம்.பி. சுகவனம் ஆகியோர் சிறப்புரையாற்றி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குறிப்பு எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மது அருந்திவிட்டு குடிபோதையில் வந்த பூக்காரவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபி (வயது 35) பெண்களிடம் ஆபாசமாக பேசினார். மேலும் முன்னாள் எம்.பி.சுகவனம் மற்றும் அங்கிருந்தவர்களை அவர் தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.க.வினர், ஆட்டோ டிரைவர் கோபியை வெளியே இழுத்துச் சென்று தாக்கினர். அங்கிருந்தவர்களில் சிலர் கோபியை மீட்டு, பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் அடைத்தனர்.
இது குறித்து ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஏலகிரி கிராமத்தில் நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story