மோட்டார் சைக்கிள் மோதி பலியான தரைக்கடை வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ‘திடீர்’ தர்ணா


மோட்டார் சைக்கிள் மோதி பலியான தரைக்கடை வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ‘திடீர்’ தர்ணா
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 4:50 PM GMT)

மோட்டார் சைக்கிள் மோதி பலியான தரைக்கடை வியாபாரி உடலை வாங்க மறுத்து, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் முருகன்(வயது35). இவர் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள என்.எஸ்.பி. ரோட்டில் சாலையோரம் தரைக்கடை அமைத்து பனியன் உள்பட துணிகளை வியாபாரம் செய்து வந்தார். கடந்த மாதம் 25–ந் தேதி காலை 9 மணிக்கு, ஜீவாநகரில் இருந்து முருகன் மலைக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

திருச்சி சிங்காரத்தோப்பு ரோட்டில் செல்லும்போது, எதிரே கீழப்புதூரை சேர்ந்த விஜய் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி முருகன் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் முருகனுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற முருகன் பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது முருகன் திடீரென வழுக்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அவர், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர், நேற்று காலை உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், விபத்தில் சிக்கி முருகன் ஏற்கனவே சிகிச்சை பெற்றதை கணக்கில் கொள்ளாமல் வீட்டில் விழுந்ததால் காயம் ஏற்பட்டு இயற்கை மரணம் அடைந்ததாக கூறி, அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல உறவினர்களிடம் அறிவுறுத்தினர்.


இது உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கி ஏற்கனவே இதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முருகன் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுத்தால் மட்டுமே வாங்கி செல்வோம். அதுவரை இங்கிருந்து நகர மாட்டோம் எனக்கூறி திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முருகனின் உறவினர்கள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் திருச்சி கோட்டை போலீசார் விரைந்து வந்து முருகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


மேலும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் சுரேஷ், பொதுசெயலாளர் அன்சாருதீன் ஆகியோரும் தரைக்கடை வியாபாரி முருகன் உடலை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே வாங்குவோம் என தெரிவித்தனர். பின்னர் போலீஸ் தரப்பில், நாளை(அதாவது இன்று) காலை 10 மணிக்கு முருகன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னரே அனைவரும் கலைந்து சென்றனர். முருகன் உடல், பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story