சேலத்தில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து சொகுசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் பனியன் கம்பெனி அதிபர் பலி 18 பேர் காயம்
சேலத்தில் அதிகாலையில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் பனியன் கம்பெனி அதிபர் பரிதாபமாக இறந்தார். இதில் 18 பேர் காயம் அடைந்தனர்.
சேலம்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டம் வழியாக பொள்ளாச்சிக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. படுக்கை வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த பஸ்சை சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் சொகுசு பஸ் வேகமாக சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
சொகுசு பஸ் வேகமாக சென்று கொண்டிருந்ததால் நிலைதடுமாறியும், பஸ்சின் மேற்கூரையில் இருந்த பாரம் தாங்காமலும் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதனால் பஸ்சில் தூங்கி கொண்டு இருந்த பயணிகள் கண் விழித்து உயிர் பயத்தால் அலறினார்கள். பின்னர் அவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என சத்தம் போட்டனர். இந்த விபத்தில் திருப்பூர் கோம்பை தோட்டம் ஜம்ஜம் நகரை சேர்ந்த பனியன் நிறுவன அதிபர் தனசேகரன் (42) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில், மேலும் டிரைவர் சரவணன் உள்பட 18 பயணிகள் காயமடைந்தனர். இதனிடையே காயமடைந்தவர்களின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை போலீஸ் கமிஷனர்கள் தங்கதுரை, சியாமளாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மீட்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கலெக்டர் ரோகிணி கேட்டறிந்தார்.
இந்த விபத்தில், ஆம்னி பஸ் டிரைவர் சரவணன், ஈரோடு மாவட்டம் அசோகபுரம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த துரைசாமி (61), ஈரோட்டை சேர்ந்த அஸ்வின் (22), திருப்பூர் சக்திநகரை சேர்ந்த வாசுதேவன், திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த சாந்தி (56), கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவி (36), பழனி சின்னாகவுண்டனூர் புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (39), பெங்களூருவை சேர்ந்த அஸ்வின்ராஜ், பிரபாகரன் (60), சிவசங்கர் (39), ஜெயலட்சுமி (54) உள்பட 18 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், தனியார் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பலியான பனியன் நிறுவன அதிபர் தன சேகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய சொகுசு பஸ் கிரேன்கள் மூலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொகுசு பஸ் வேகமாக சென்றதும், பஸ்சின் மேற்கூரையில் வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் பண்டல் பண்டலாக சுமார் 3 டன் எடையளவுக்கு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அதிக பாரம் தாங்காமல் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் நடந்த இந்த விபத்து சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ரோகிணி கூறுகையில், பயணிகள் பஸ்களில் பயணிகளை மட்டும் தான் ஏற்றி செல்ல வேண்டும். சரக்குகளை ஏற்றி செல்லக்கூடாது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story