விபத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் சாவு: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் சாவு: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே விபத்தில் இறந்த அங்கன்வாடி பெண் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், கும்பகோணம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது40). சாயப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி மாலா(39). அங்கன்வாடிபணியாளர். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி ரமேஷ் தனது மனைவி மாலாவுடன் சென்னையிலிருந்து ஒரு அரசு பஸ்சில் கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென பஸ் பழுதடைந்தது. இதனால் பஸ்சை வழியில் நிறுத்தி பழுது நீக்கி கொண்டிருந்தனர். அப்போது பின்புறம் வந்துகொண்டிருந்த மற்றொரு அரசு பஸ், நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது. இதில் நின்று கொண்டிருந்த பஸ்சில் அமர்ந்திருந்த மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்சுந்தர்லால் மாலாவின் கணவர் ரமேசுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்து 812 இழப்பீடாக வழங்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 31-ந் தேதி உத்தரவிட்டார். இதில் ரூ.55 ஆயிரத்து 640-ஐ தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் ரமேஷ் கும்பகோணம் கோர்ட்டில் நிறைவேற்ற கோரும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Next Story