ஆனைக்கட்டி மலைப்பாதையில் காட்டு யானை தாக்கியதில் கார் சேதம்
கோவை அருகே உள்ள ஆனைக்கட்டி மலைப்பாதையில் காட்டு யானை தாக்கியதில் கார் சேதம் அடைந்தது. அந்த காருக்குள் இருந்த வியாபாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
துடியலூர்,
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வியாபாரி செல்வராஜ் (வயது 55) தொழில் சம்பந்தமாக கேரள மாநிலம் மன்னார்காடு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு தனது கார் மூலம் ஆனைக்கட்டி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வந்து கொண்டி ருந்தார். இரவு 10.30 மணியளவில் அங்குள்ள சேம்புக்கரை செல்லும் பிரிவு அருகே வந்தபோது ரோட்டில் 4 காட்டு யானைகள் நின்றன. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தனது காரை நிறுத்தினார். அரை மணி நேரம் ஆகியும் அந்த யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் அவர் காரை நிறுத்தியபடி அங்கேயே காத்து இருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு யானை மட்டும் காரை நோக்கி ஓடி வந்தது. இதனால் செய்வது அறியாமல் செல்வராஜ்திகைத்தார். கார் அருகே வந்த அந்த யானை திடீரென்று தனது முன்னங்காலை தூக்கி காரை வேகமாக மிதித்தது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. அதிர்ச்சியில் உறைந்த செல்வராஜ், காருக்குள்ளேயே இருந்தார். காரைவிட்டு வெளியே வரவில்லை.
சிறிது நேரம் அங்கு நின்றிருந்த யானை, பின்னர் அங்கிருந்து பிளிறியபடி மெதுவாக மற்ற யானை களுடன் சேர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் காரை விட்டு வெளியே வந்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அத்துடன் அந்த காரை அங்கேயே நிறுத்திவிட்டு வேறு வாகனம் மூலம் மாங்கரை சோதனைச்சாவடிக்கு வந்து நடந்த விவரத்தை தெரிவித்தார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு திரும்பி சென்றார். இதையடுத்து வனத்துறையினர் சோதனைச்சாவடி வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் நிற்பதால் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கினர்.
Related Tags :
Next Story