கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்த முயன்ற மருத்துவ மாணவர் கைது
கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்த முயன்ற மருத்துவ கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒருவர் தன்னிடம் இருந்த பையை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக அவரிடம் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டார்.
இதைகண்ட போலீசார், அந்த நபர்களிடம் விசாரிக்க சென்றனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பையுடன் நின்ற வாலிபரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். அவர் மீது கஞ்சா வாசனை வந்தது. இதனால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அதில் அவர், கேரள மாநிலத்தை சேர்ந்த நிஜூமன்மியா (வயது 20) என்பதும், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. மேலும் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை அவர் புதுச்சேரிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது.
மாணவர் நிஜூமன்மியா, அடிக்கடி கோயம்பேடு பஸ் நிலையம் வந்து பணம் கொடுத்து கஞ்சாவை வாங்கி, புதுச்சேரிக்கு கடத்திச்சென்று தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளார். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருத்துவ கல்லூரி மாணவர் நிஜூமன்மியாவை கைது செய்தனர். மேலும் அவருக்கு கஞ்சா வினியோகம் செய்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.