மணல் குவாரியை மூடி கொள்ளிடம் ஆற்றில் கதவணைகளை அமைக்க வேண்டும் திருமாவளவன் பேச்சு


மணல் குவாரியை மூடி கொள்ளிடம் ஆற்றில் கதவணைகளை அமைக்க வேண்டும் திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 7:47 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை மூடி, அப்பகுதியில் கதவணைகளை அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசினார்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியை கண்டித்தும், அதை மூட வலியுறுத்தியும் திருமானூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் மணல் குவாரி தான். மணல் அள்ள அள்ள ஆறுகள் புதர்களாக மாறுகிறது. இதனால் நிலத்தில் நீர் தேங்காமல் கடலுக்கு நேரடியாக சென்று வீணாக கலக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஆகையால் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு கல்லணை முதல் கீழணை வரை மணல் குவாரி அமைக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை மூடி, அப்பகுதிகளில் கதவணைகளை அமைத்து தர வேண்டும். மேலும் மக்களை பாதிக்காத வகையில் நிதி ஒதுக்கீடு செய்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை மூட வலியுறுத்தி போராடும் போராட்டக் குழுவுக்கு கடைசி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருமாவளவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது நிருபர்கள், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் சென்று விட்டார். ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தனபால், அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சின்னப்பா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் அன்பானந்தம், அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன், திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story