உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை சரிவு விவசாயிகள் கவலை


உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை சரிவு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1900-க்கு விற்பனை செய்கின்றனர்.

வாங்கிய கரும்புகளை எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதம் வந்து பாகு ஆனவுடன், மர அச்சுத்தொட்டியில் ஊற்றி உலரவைத்து குப்புற கவிழ்த்தி மர சுத்தியால் தட்டுகிறனர். அதிலிருந்து அச்சு வெல்லம் மள, மளவென விழுகிறது. அதே போல் மரத்தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலரவைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் நன்கு உலரவைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.

தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம், உத்தரப்பிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1150-க்கும், 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1150- க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

இந்த வாரம் வியாபாரிகள் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.950-க் கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.950-க்கும் வாங்கிச் சென்றனர். வெல்லம் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாகவும், வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதியாகும் வெல்லப்பாகுவிலிருந்து வெல்லம் தயாரிப்பதாலும், வெல்லம் மற்றும் கரும்பு விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Next Story