ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையாகும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையாகும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2019 3:30 AM IST (Updated: 14 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையாகும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறினார்.

திருப்பூர், 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி, 7 பேர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு பயணத்தை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் போன்றவர்களிடம் கருத்து கேட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள சேம்பர் ஹாலில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அற்புதம்மாள் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 7 பேர் விடுதலைக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஏன் இன்னும் கவர்னர் கையொப்பமிடவில்லை என்ற கேள்வியோடு மக்களை சந்திக்கிறேன். இங்குள்ள மக்களை ஒருங்கிணைத்து, இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது.அரசு முடிவெடுத்தும் கூட கவர்னர் கையொப்பமிடமில்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என பொதுமக்களை கேட்க வந்துள்ளேன். 28 ஆண்டுகள் இவர்கள் சிறைதண்டனை அனுபவித்துள்ளனர்.

அமைச்சரவையின் தீர்மானம் நிறைவேற்றி சட்டவிதி 161-ன் படி தமிழக அரசு கவர்னர் கையொப்பத்துடன் விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அது நடைபெறவில்லை. இந்த ஒரு வழக்கில் தான் 3 முறை விடுதலை என அறிவிக்கப்பட்டும் அவர்கள் சிறையில் உள்ளனர். இந்த பயணம் நீடிக்காமல் இருக்க உடனே கவர்னர் கையொப்பமிட வேண்டும். இந்த நம்பிக்கையில் தான் அனைத்து ஊர்களுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறேன்.

இதில் திருப்பூர் 12-வது மாவட்டமாகும். சட்டம் சொல்லியும், அரசு முடிவெடுத்தும் நியாயம் கிடைக்கவில்லை. இதுவரை கவர்னர் எதையும் யோசிக்கவில்லை. கட்சிகள் பாகுபாடு இல்லாமல், யாராக இருந்தாலும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து கருத்துகள் கேட்டு வருகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இருக்கும் போது, அதற்கு கவர்னர் வரவேற்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இந்த சந்திப்பை நடத்தி வருகிறேன். இந்த பயணத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது.

7 பேர் விடுதலையாகும் வரையும், இது சாத்தியமாகும் வரையும் துணையாக இருப்போம் என செல்கிற மாவட்டங்களில் ஒப்புதல் கொடுக்கிறார்கள். சட்டப்படியாக ஒரு தீர்வு வந்தும். இன்னமும் இதற்கு ஒரு முடிவு வராதது வேடிக்கையாக உள்ளது. வேறு எந்த வழக்கிற்கும் இப்படி இல்லை. இந்த வழக்கிற்கு தான் இப்படி உள்ளது. இதனால் தான் மக்களை அணுகி உள்ளேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையாகும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பறை இசையுடன் அற்புதம்மாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பறை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். 

Next Story