கருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 8:39 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் போன்றவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய்யும் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்றும் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.

இந்த நிலையில், மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலையோரம் பிளாஸ்டிக் கேன்களில் 1,000 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதை பார்த்தனர். இந்த மண்எண்ணெய் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுவதாகும். விசாரணையில், கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், அவற்றுக்கு உரிமை கொண்டாட யாரும் வரவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெய் கேன்களை பறிமுதல் செய்து இனயம் அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், மண்எண்ணெயை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story