கடலூரில் காதலர் தினத்தை கொண்டாடிய ஜோடிகள் ரோஜா பூ கொடுத்து அன்பை பகிர்ந்தனர்


கடலூரில் காதலர் தினத்தை கொண்டாடிய ஜோடிகள் ரோஜா பூ கொடுத்து அன்பை பகிர்ந்தனர்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:15 PM GMT (Updated: 14 Feb 2019 5:31 PM GMT)

கடலூரில் காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் ரோஜா பூ கொடுத்து அன்பை பகிர்ந்தனர்.

கடலூர், 

ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதியை காதலர் தினமாக காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் தங்களின் காதலை வெளிப்படுத்தியும், ரோஜா பூவை கொடுத்தும் தங்களின் அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இதன்படி இந்த ஆண்டிற்கான காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடலூரில் காதலர் தினத்தை காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் காதல் ஜோடியின் வரத்து அதிகமாக இருந்தது. அவர்கள் சிறிது நேரம் சீறி வந்த கடல் அலைகளை ரசித்தனர். பின்னர் கடல் தண்ணீரில் கால்களை நனைத்து விட்டு, கடற்கரையோரம் அமர்ந்து பேசினர்.

குறிப்பாக கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தான் ஜோடியாக சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. சிலர் அங்கு நிறுத்தப்பட்ட கட்டுமரத்தின் அருகில் அமர்ந்து கொஞ்சி பேசி பொழுதை கழித்தனர். சிலர் எல்லை மீறி முத்தமிட்டும் மகிழ்ந்தனர். இதேபோல் புதுமண தம்பதியினரும் சில்வர் பீச்சுக்கு வந்து தங்களின் அன்பை பரிமாறினர். அவர்கள் கடற்கரையோரம் நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் கடலில் குளித்து மகிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. கடலூர் நகராட்சி பூங்காவிலும் சில காதல் ஜோடியினர் உலா வந்தனர். அவர்களும் மறைவிடங்களில் அமர்ந்து காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். வெளியில் வர முடியாத காதல் ஜோடியினர் வாட்ஸ்-அப், முகநூல் என சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்தை பறிமாறிக்கொண்டனர். சிலர் தங்களின் காதலிக்கு, காதலனுக்கு பிடித்த பாடல்களை, கவிதைகளை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசாக வைத்தும் மகிழ்ந்தனர். செல்போனில் பேசியும் காதலர் தினத்தை கொண்டாடினர். காதல் திருமணம் செய்த தம்பதியினரும் காதலர் தினத்தை கொண்டாடினர். தனது மனைவிக்கு பிடித்த பொருட்களை பரிசாக வழங்கி, தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

காதலர் தினத்தில் ரோஜா பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்படும் டச் ரோஸ் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 20 பூக்களை கொண்ட ஒரு கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற நேரங்களில் இந்த பூ ஒரு கட்டு ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும்.

அதேபோல் ஒரு ஜோடி ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. தனியாக ஒரு பூ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இருப்பினும் இந்த பூக்களை காதலர்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். காதலர் தினத்தில் வாழ்த்து அட்டைகளை கொடுத்து தங்களின் காதலை வெளிப்படுத்தி வந்த காலங்கள் போய் தற்போது காதலர்கள் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப சமூக வலைத்தளங்களுக்குள் சென்று காதலை சொல்லி வருகின்றனர். கடலூரில் போலீசாரின் கெடுபிடி இன்றி காதலர்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.

Next Story