7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 14 Feb 2019 11:38 PM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 மணி நேரத்திற்கு ஒரு வருகைப்பதிவேடு என்ற முறையை அமல்படுத்த வேண்டும், தற்போது கி.மீ. நீட்டிப்பு செய்து தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவை திணிப்பதை கைவிட வேண்டும், கி.மீ. நீட்டிப்பு விவகாரத்தில் போராடிய தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு போக்கு வரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் மூர்த்தி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கணேசன், பாட்டாளி தொழிற்சங்க கிளை தலைவர் சுப்பிரமணி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

செஞ்சி பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பா.ம.க. மண்டல தலைவர் குப்புசாமி, சி.ஐ.டி.யு. பக்தவச்சலம், எம்.எல்.எப். பிரசார செயலாளர் விநாயக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொ.மு.ச. ஓட்டுனர் செயலாளர் நாராயணசாமி, நடத்துனர் செயலாளர் தியாகராஜன், தொழில்நுட்ப பிரிவு காதர் நவாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக 1, 2, 3 பணிமனைகள், கள்ளக்குறிச்சி 1, 2 பணிமனைகள், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய பணிமனைகளிலும் போக்கு வரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story