அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிழல் அறிக்கை நாளை வெளியீடு


அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிழல் அறிக்கை நாளை வெளியீடு
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 6:58 PM GMT)

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிழல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தடை விதிப்பது குறித்து சட்டசபையில் எந்த முடிவும் அறிவிக்காதது, தமிழக அரசு அத்திட்டத்திற்கு துணை போகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. பென்னிகுயிக் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதையும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஏ.டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறோம்.

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்து எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அதுகுறித்து தமிழக அரசு அறிவிக்காதததை கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கையானது உலக இயற்கை ஆர்வலர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

இதுகுறித்து ஆலோசிக்க நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் அணுகுமுறை குறித்து முடிவெடுக்கப்படும். மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகள் குறித்து நாடாளுமன்ற தேர்தல் நிழல் அறிக்கையும் வெளியிட உள்ளோம். இதனை முன்னாள் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதியரசர் ஜோதிமணி வெளியிட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story