கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் நல்லசாமி பேட்டி


கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் நல்லசாமி பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 7:25 PM GMT)

கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறினார்.

திருச்சி,

தமிழகத்தின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, சேவல்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவற்றுக்கான தடையை நீக்கியது போல் கள்ளுக்கான தடையையும் அரசு நீக்கி அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளரை களம் இறக்குவோம். இது அரசியல் கட்சிகளுக்கும், அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வரும் தலைவர்களுக்கும் நெருக்கடியை கொடுக்கும். ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்படுவதை கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு சிறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆதாயம் பெற வேண்டும் என்பதே இதுபோன்ற அறிவிப்புகளின் உள்நோக்கம். இதேபோல் ஆந்திர அரசு அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் என அறிவித்து இருப்பது விவசாயிகளை திட்டமிட்டு பிச்சைக்காரர்களாக்கும் பிற்போக்கு நடவடிக்கை. தேர்தலை முன் நிறுத்தி கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களின் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் விடுக்கும் சவாலாக நாங்கள் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விவசாய சங்க நிர்வாகிகள் மகாதானபுரம் ராஜாராம், கே.சி.ஆறுமுகம், ஹேமநாதன், சீனிவாசன், பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற மாதிரி தேர்தல் அறிக்கையில் விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. 

Next Story