முக்கொம்பு மேலணை பூங்காவில் வலம் வந்த காதல் ஜோடிகள்


முக்கொம்பு மேலணை பூங்காவில் வலம் வந்த காதல் ஜோடிகள்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:15 AM IST (Updated: 15 Feb 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

முக்கொம்பு மேலணை பூங்காவில் காதல் ஜோடிகள் வலம் வந்தனர். அங்கு காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

திருச்சி,

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காதலர்கள் நேருக்கு நேர் சந்தித்து தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நினைவுப் பரிசுகள் மற்றும் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர். நேருக்கு நேர் சந்திக்க முடியாத காதலர்கள் வாட்ஸ்-அப் மற்றும் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் காதல் திருமணம் செய்த தம்பதியினரும் நேற்று தங்களது காதலை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில காதலர்கள் பூங்கா, சினிமா தியேட்டர், வணிக வளாகம், கேக் ஷாப் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ஜோடியாக சென்றனர்.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான முக்கொம்பு மேலணை காவிரி பூங்காவுக்கு காதல் ஜோடிகள் அதிகமாக வருவதுண்டு. ஆனால், கடந்த சில நாட்களாக இப்படி காதலர்கள் திரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. சில ஜோடிகளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்த சம்பவமும் கடந்த காலங்களில் நடந்தது.

எனவே, காதலர்கள் இத்தகைய சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதால் பெரும்பாலும் வெளியிடங்களை தவிர்த்து வருகிறார்கள். காதலர் தினமான நேற்று முக்கொம்பு மேலணை பூங்காவில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் பூங்காக்களில் சில காதல் ஜோடிகள் கைகோர்த்தபடியும், தோளில் கைபோட்டு அணைத்தபடியும் வலம் வந்தனர். சிலர் பூங்காக்களில் ஆங்காங்கே ஒதுக்குப்புறமான மரத்தடியில் அமர்ந்து காதலை பரிமாறிக்கொண்டனர். சிலர் ஜோடியாக செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். பூங்காக் களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் காதல் ஜோடிகளுக்கு இடையூறு ஏதும் ஏற்படுத்தவில்லை.

மேலும் சில இளைஞர்கள் வேட்டி, கலர் சட்டை என அணிந்து ஒரு குழு, குழுவாக பூங்காவில் சுற்றித் திரிந்தனர். சில காதல் ஜோடி ஆர்வ மிகுதியால் காவிரி ஆற்றில் குட்டைபோல தேங்கிய தண்ணீரில் குளித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை சிதறடித்தும் காதல் ஜோடியினர் விளையாடினர். ஒரு கட்டத்தில் காவிரி ஆற்றில் குளித்த காதலியை, காதலன் ஒருவர் அலேக்காக தூக்கி விளையாடினார். காதலர்கள் எல்லைமீறுவதை தடுக்கும் வகையில், ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க விடாமல் பெண் போலீசார் துரத்தினார்கள்.

முக்கொம்பு பூங்காவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில்,“பூங்காவில் காதலர் தினத்தையொட்டி ஏராளமான கூட்டம் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அதாவது வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளை விட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது” என்றார்.

திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணை, திருச்சி மாநகராட்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதல் ஜோடிகள் எல்லை மீறுவதை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story