பள்ளி மாணவி பலாத்காரம்: உடந்தையாக இருந்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


பள்ளி மாணவி பலாத்காரம்: உடந்தையாக இருந்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 14 Feb 2019 10:15 PM GMT (Updated: 14 Feb 2019 8:38 PM GMT)

பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் முனிவேல் (வயது 25). தொழிலாளி. இவருடைய நண்பரான வாலிபர் ஒருவர் 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அந்த மாணவியை கடந்த 2016-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்தார். பின்னர் அந்த மாணவி பலாத்காரத்திற்கு உள்ளானார்.

இந்த சம்பவங்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக முனிவேல் மீது புகார் எழுந்தது. அதன்பேரில் போலீசார் முனிவேலை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் அரசு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் முனிவேலுக்கு மாணவியின் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், இளம்வயது திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்டதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் நேற்று தீர்ப்பு அளித்தார்.

இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முனிவேல் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குள் ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலம் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு, நீதிபதி பரிந்துரை செய்தார்.

Next Story